
(எப்ரல் 23 உலக புத்தகநாள் வாழ்த்துக்கள்)
புத்தகங்கள்
மெளனமாக சொல்வதை
மனிதர்கள்
கண்களால் கேட்கும்
அதிசய இடம்
இது
சகிப்புத்தன்மையின் சரணாலயம்
பைபுள்,குரான்,பகவத்கீதை
அருகருகே வைத்தாலும்
எவையும்
அடித்துக்கொள்வதுமில்லை
இடித்துக்கொள்வதுமில்லை
இது
ஒரு விமானம்
வந்து அமர்ந்தால் போதும்
பாஸ்போட் வேண்டாம்
பயணச்சிட்டு வேண்டாம்
உலக்ம் சுற்றலாம்
ஏன்
சிந்துசமவெளியின்
சந்துகளைக்கூட
சந்தித்து வரலாம்
இங்கு வரும்
எவரும் நேரத்தை
செலவழிப்பதில்லை
சேமிக்கிறார்கள்
இது
ஒரு தவச்சாலை
இங்கு உங்களுக்கு
வரம் கொடுக்க
புத்தகங்கள்
தவம் கிடக்கிறது
இது தேசத்தின்
அனுபவ வங்கி
நேசம் கொண்டோரே
கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்
அறிவு பசிப்போரே
உங்களுக்கு இது
அட்சய பாத்திரம்
இங்கு மட்டும்தான்
நூல்கள் மனிதனை
நெய்கின்றன