Friday, April 17, 2009

கொடைக்கானல் மலைப்பாதையில்......


மேகத்தை குனிந்து பார்க்கும்
வரம் கிடைத்தது
எனக்கு அங்குதான்.

நெருப்பால் அல்ல
பூக்களால் புகைந்து
கொண்டிருக்கும் பூமி அது

இங்கெல்லாம் சாலை
ஒரத்தில் மரங்கள் இருக்கும்
அங்கோ
மரங்களின் ஒரத்தில் சாலை

புகைப்பட்டால் கண்களில்
எரிச்சல் வரும்
அங்கு புகைப்பட்ட என்
கண்களுக்கு குளிர்ச்சி வந்தது
அந்த அதிசய புகை
அங்கு மட்டும்தான் சாத்தியம்

அங்கு அவ்வப்போது
வானம் பூக்களை பார்த்து
புன்னகை சிந்தும்
அதற்கு பெயர் சாரல்.

வானவில்லை
நறுக்கி போட்டதைப்போல் எங்கும்
வண்ண வண்ணப் பூக்கள்

அந்த மலையரசிக்கு
கோடிக்கரங்கள்
அத்தனையும் மரங்கள்

மிடுக்கான மலை
துள்ளி வரும்
வெள்ளி அருவி
பசுமை மரங்கள்
ஒன்றாய் பர்ர்த்தால்
என் தேசிய கொடி
நன்றாய் தெரியும்.

அங்கும் பார்த்தேன்
இரண்டாயிரம் அடி
கடல் மட்டத்திற்கு மேல்
மக்கள் வாழ்கிறார்கள்
ஆனால் அவர்களின்
வாழ்க்கை
வறுமை கோட்டிற்கு
கீழேதான்.

மூன்று நாட்கள்
நான் தங்கி வந்து விட்டேன்
என் மனம் இன்னும் வரவில்லை.

No comments:

Post a Comment